ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 65:16-22

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 65:16-22 TAERV

“ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர். ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்பார்கள். இப்பொழுது ஜனங்கள் வாக்குறுதிச் செய்யும்போது, பூமியின் வல்லமையை நம்புகின்றனர். ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவன் மீது நம்பிக்கை வைப்பார்கள். ஏனென்றால் கடந்தகாலத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் மறக்கப்படும். என் ஜனங்கள் இந்தத் துன்பங்களையெல்லாம் மீண்டும் நினைக்கவேமாட்டார்கள்.” “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள். எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நான் என்ன செய்யப்போகிறேன்? நான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன். அவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன். “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன். நான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது. இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது. இனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும். ஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான். 100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான். பாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான். “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான். ஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான். மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான். மீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான். எனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள். நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.