ஏசாயா 5:22-30
ஏசாயா 5:22-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
திராட்சைமது குடிப்பதில் வீரரும், மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், அவர்களின் வேர்கள் அழுகி, பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள். அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது: அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார். மலைகள் நடுநடுங்கின, அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது. அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, பூமியின் கடைசியிலுள்ளவர்களைக் கூவி அழைக்கிறார். இதோ, அவர்கள் வருகிறார்கள், விரைந்து வேகமாய் வருகிறார்கள்! அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை; ஒருவரும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை; அவர்களின் இடைப்பட்டி தளர்த்தப்படுவதுமில்லை, அவர்களின் செருப்புகளின் தோல்வார் ஒன்றும் அறுந்துபோவதும் இல்லை. அவர்களுடைய அம்புகள் கூரானவை; வில்லுகள் நாணேற்றப்பட்டவை. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்கள் போலவும், தேர்ச் சக்கரங்கள் சுழற்காற்றைப் போலவும் காணப்படுகின்றன. அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது, அவர்கள் இளஞ்சிங்கத்தைப்போல் கெர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் தங்கள் இரையைப் பற்றிக்கொள்ளும்போது உறுமுகிறார்கள்; அதை விடுவிக்கிறவன் இல்லாமல், அவர்கள் தாங்கள் பிடித்ததைக் கொண்டுபோகிறார்கள். அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள். ஒருவன் அந்த நாட்டைப் பார்க்கும்போது இருளையும் துன்பத்தையுமே காண்பான்; வெளிச்சமும் மேகங்களால் இருளாக்கப்படும்.
ஏசாயா 5:22-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சாராயத்தைக் குடிக்க வீரர்களும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, லஞ்சத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாகப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ, இதினிமித்தம் நெருப்புத்தழல் வைக்கோலை சுட்டெரிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்களுடைய வேர் வாடி, அவர்களுடைய துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டை செய்தார்களே. ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. அவர் தூரத்திலுள்ள தேசத்தாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் தூரமான இடங்களிலிருந்து சைகைகாட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் துரிதமும் வேகமுமாக வருவார்கள். அவர்களில் சோர்வடைந்தவனும் தடுமாறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், காலணிகளின் வார் அறுந்துபோவதும் இல்லை. அவர்களுடைய அம்புகள் கூர்மையும், அவர்களுடைய வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்களுடைய உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும். அவர்களுடைய கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, காப்பாற்றுகிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அந்நாளில், கடல் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.
ஏசாயா 5:22-30 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்கள் மது குடிப்பதிலே புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் பராக்கிரமசாலிகள். நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கேடு ஏற்படும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததி வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர். எனவே இந்த ஜனங்கள் மீது கர்த்தர் மிகுந்த கோபமாயிருக்கிறார். கர்த்தர் தன் கையை உயர்த்தி அவர்களைத் தண்டிப்பார். மலைகள் கூட அவருக்குப் பயப்படும். மரித்துப்போன உடல்கள் தெருக்களில் குப்பைபோன்று குவியும். ஆனாலும் தேவன் மேலும் கோபமாக இருப்பார். அவரது கை மேலும் உயர்ந்து அவர்களைத் தண்டிக்கும். பாருங்கள்! தேவன் தூர நாடுகளுக்கு ஒரு அடையாளம் காட்டிவிட்டார். தேவன் ஒரு கொடியை உயர்த்திவிட்டார். அவர் அவர்களைச் சத்தமிட்டு அழைப்பார். அவர்கள் தூர நாடுகளில் இருந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் விரைவில் நாட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள் வேகமாக நகருவார்கள். பகைவர்கள் எப்பொழுதும் சோர்ந்து விழுவதில்லை. அவர்கள் தூக்கம் வந்து தூங்குவது இல்லை. அவர்களின் ஆயுதக் கச்சைகள் எப்போதும் தயாராக இருக்கும். அவர்களது பாதரட்சைகளின் கயிறுகள் அவிழ்வது இல்லை. பகைவரின் அம்புகள் கூர்மையானதாக இருக்கும். அவர்களது வில்லுகள் எய்யத் தயாராக இருக்கும். குதிரைகளின் குளம்புகள் பாறையைப்போன்று கடுமையாக இருக்கும். அவர்களின் இரதங்களுக்குப் பின்னே புழுதி மேகங்கள் எழும்பும். பகைவர்கள் சத்தமிடுவார்கள். அச்சத்தம் சிங்கம் கெர்ச்சிப்பதுபோல் இருக்கும். அது இளஞ் சிங்கத்தின் சத்தம்போல் இருக்கும். பகைவர்கள் தமக்கு எதிராகச் சண்டையிடுபவர்களை பிடித்துக்கொள்வார்கள். ஜனங்கள் போராடி தப்ப முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. ஆகவே, “சிங்கங்களின்” சத்தமானது கடலலைகளின் இரைச்சல் போல் கேட்கும். கைப்பற்றப்பட்ட ஜனங்கள் தரையைப் பார்ப்பார்கள். அதில் இருள் மட்டுமே இருக்கும். கெட்டியான மேகத்தால் வெளிச்சம் கூட இருட்டாகிவிடும்.
ஏசாயா 5:22-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! இதினிமித்தம் அக்கினிஜூவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே. ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள். அவர்களில் விடாய்த்தவனும் இடறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், பாதரட்சைகளின் வார் அறுந்துபோவதும் இல்லை. அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும். அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.