ஏசாயா 5:22-30

ஏசாயா 5:22-30 TCV

திராட்சைமது குடிப்பதில் வீரரும், மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், அவர்களின் வேர்கள் அழுகி, பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள். அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது: அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார். மலைகள் நடுநடுங்கின, அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது. அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, பூமியின் கடைசியிலுள்ளவர்களைக் கூவி அழைக்கிறார். இதோ, அவர்கள் வருகிறார்கள், விரைந்து வேகமாய் வருகிறார்கள்! அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை; ஒருவரும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை; அவர்களின் இடைப்பட்டி தளர்த்தப்படுவதுமில்லை, அவர்களின் செருப்புகளின் தோல்வார் ஒன்றும் அறுந்துபோவதும் இல்லை. அவர்களுடைய அம்புகள் கூரானவை; வில்லுகள் நாணேற்றப்பட்டவை. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்கள் போலவும், தேர்ச் சக்கரங்கள் சுழற்காற்றைப் போலவும் காணப்படுகின்றன. அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது, அவர்கள் இளஞ்சிங்கத்தைப்போல் கெர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் தங்கள் இரையைப் பற்றிக்கொள்ளும்போது உறுமுகிறார்கள்; அதை விடுவிக்கிறவன் இல்லாமல், அவர்கள் தாங்கள் பிடித்ததைக் கொண்டுபோகிறார்கள். அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள். ஒருவன் அந்த நாட்டைப் பார்க்கும்போது இருளையும் துன்பத்தையுமே காண்பான்; வெளிச்சமும் மேகங்களால் இருளாக்கப்படும்.