ஏசாயா 40:18-26

ஏசாயா 40:18-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்? விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான், கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி, அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான். அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான். அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான். நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ? பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ? அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார், அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து, அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார். அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்; உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார். அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே, அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே, அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத, அவர்கள் வாடிப்போகிறார்கள். சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது. “நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார். கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: இவைகளையெல்லாம் படைத்தவர் யார்? நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து, அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே. அவருடைய மிக வல்லமையாலும், மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.

ஏசாயா 40:18-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? உலோக வேலைசெய்பவன் ஒரு சிலையை வார்க்கிறான், கொல்லன் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருத்துகிறான். அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சிலையைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான். நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா? அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிமக்கள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதும்போது பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும். இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை சமமாக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்கிறார். உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

ஏசாயா 40:18-26 பரிசுத்த பைபிள் (TAERV)

எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது! தேவனுடைய படத்தை உருவாக்க முடியுமா? முடியாது! ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து அவர்கள் அதனைத் தெய்வங்கள் என்று அழைக்கின்றனர். ஒரு வேலைக்காரன் ஒரு சிலையைச் செய்கிறான். பிறகு, இன்னொரு வேலைக்காரன் அதனைத் தங்கத்தால் மூடுகிறான். வெள்ளிச் சங்கிலிகளையும் அதற்காகச் செய்கிறான். அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான். அது உளுத்துப்போகாத மரவகையைச் சேர்ந்தது. பிறகு, அவன் ஒரு சிறந்த மரத்தச்சனைக் கண்டுபிடிக்கிறான். அந்த வேலைக்காரன் விழாமல் இருக்கிற ஒரு தெய்வம் செய்கிறான். நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா? நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக ஒருவன் நீண்ட காலத்துக்குமுன் சொன்னான்! இந்த உலகத்தைப் படைத்தவர் யார் என்று நிச்சயமாக நீ புரிந்திருக்கிறாய்! கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். அவரோடு ஒப்பிடும்போது, ஜனங்கள் வெட்டுக்கிளிகளைப்போலிருக்கிறார்கள். அவர் வானங்களை ஒரு துண்டு துணியைப்போல் பரப்புகிறார். அவர் வானங்களைக் குடியிருப்பதற்கான கூடாராமாக்குகிறார். ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார். அவர் இந்த உலகத்தில் உள்ள நீதிபதிகளை முழுமையாகப் பயனற்றவர்களாகச் செய்கிறார். ஆளுவோர் தாவரங்களைப்போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள். ஆனால், அவை தரைக்குள் தன் வேர்களைச் செலுத்துவதற்குமுன், தேவன் அத்தாவரங்களின் மேல் ஊதுகிறார். அவை செத்து காய்ந்து போகின்றன. பெருங்காற்று அவற்றை புல்லைப்போல அடித்துப்போகும். பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது. எனக்கு இணையாக ஒருவரும் இல்லை. மேலே வானங்களைப் பாருங்கள். இந்த நட்சத்திரங்களை எல்லாம் படைத்தது யார்? வானத்தில் இந்தப் “படைகளை” எல்லாம் படைத்தது யார்? ஒவ்வொரு நட்சத்திரங்களின் பெயரும் யாருக்கு தெரியும்? உண்மையான தேவன் மிக்க பலமும் வல்லமையும் கொண்டவர். எனவே, நட்சத்திரங்களில் எதுவும் குறையாது.

ஏசாயா 40:18-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான். அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான். நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா? அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்ப பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோகும். இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்