ஏசாயா 40:1-8
ஏசாயா 40:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், என உங்கள் இறைவன் சொல்கிறார். எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது; அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது; அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும் இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள். ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: “பாலைவனத்தில் யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள். ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும். யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.” “உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, பூக்களும் உதிர்கின்றன; நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள். புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
ஏசாயா 40:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் ஆதரவாகப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியானது என்றும், அது தன் சகல பாவங்களுக்காக யெகோவாவின் கையில் இரட்டிப்பாக அடைந்து முடிந்தது என்றும், அதற்குச் சொல்லுங்கள் என்று உங்கள் தேவன் சொல்கிறார். யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், யெகோவாவின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாகக் காணும், யெகோவாவின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டானது. பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டானது; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. யெகோவாவின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; மக்களே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
ஏசாயா 40:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
உனது தேவன் கூறுகிறார், “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்! எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள். உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது. ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு. கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் இருமுறை தண்டித்தார்.” கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்! “கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்! நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்! ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள். ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள். கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள். பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும். கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள். ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!” ஒரு குரல் சொன்னது, “பேசு!” எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?” அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள். அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது. கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும். அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும். உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும். ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”
ஏசாயா 40:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.