ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:1-8

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 40:1-8 TAERV

உனது தேவன் கூறுகிறார், “ஆறுதல்படுத்துங்கள்! எனது ஜனங்களை ஆறுதல்படுத்துங்கள்! எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள். உனது சேவைக்கான காலம் முடிந்துவிடுகிறது. ‘உனது பாவங்களுக்கான விலையைக் கொடுத்து விட்டாய்’ என்று எருசலேமிடம் கூறு. கர்த்தர் எருசலேமை அவள் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் இருமுறை தண்டித்தார்.” கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறான்! “கர்த்தருக்காக இந்த வனாந்திரத்தில் ஒரு பாதையை தயார் செய்யுங்கள்! நமது தேவனுக்காக வனாந்திரத்தில் ஒரு சாலை அமையுங்கள்! ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள். ஒவ்வொரு மலையையும் பள்ளத்தாக்கையும் நேராக்குங்கள். கரடுமுரடான சாலையை மென்மையாக்குங்கள். பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும். கர்த்தருடைய மகிமையை ஜனங்கள் அனைவரும் காண்பார்கள். ஆம், கர்த்தர் அவராகவே இவற்றைச் சொன்னார்!” ஒரு குரல் சொன்னது, “பேசு!” எனவே ஒருவன் கேட்டான், “நான் என்ன சொல்லவேண்டும்?” அந்த குரல் சொன்னது, “ஜனங்கள் என்றென்றைக்கும் வாழமாட்டார்கள். அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். அவர்களது நன்மை ஒரு காட்டு மலர் போன்றது. கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும். அந்த புல்களும் காட்டு மலர்களும் வாடி செத்துப்போகும். உண்மையாகவே அனைத்து ஜனங்களும் புல்லைப்போன்றவர்கள். புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும். ஆனால், தேவனுடைய வார்த்தை என்றென்றும் தொடர்ந்து இருக்கும்.”