ஏசாயா 22:15-24

ஏசாயா 22:15-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நீ போய் அரண்மனைக்குப் பொறுப்பாய் இருக்கும் அதிகாரியான செப்னாவிடம் சொல்லவேண்டியதாவது: நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கென்று இந்த இடத்தில் ஒரு கல்லறையை வெட்டுவதற்கு உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? உயர்ந்த இடத்தில் உனது கல்லறையை வெட்டவும், கற்பாறையில் உனது இளைப்பாறும் இடத்தைச் செதுக்கவும் உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? “வலியவனே, எச்சரிக்கையாயிரு, யெகோவா உன்னை இறுகப் பிடித்துத் தூக்கியெறியப் போகிறார். அவர் உன்னை இறுக்கமாய் சுருட்டி, ஒரு பந்துபோல் ஆக்கி, ஒரு பெரிய நாட்டிற்குள் எறிவார். அங்கே நீ சாவாய், உனது சிறப்பான தேர்கள் அங்கு இருக்கும்; நீ உன் எஜமான் வீட்டுக்கு அவமானமாய் இருந்தாயே. நான் உனது பதவியிலிருந்து உன்னை நீக்குவேன், நீ இருக்கும் நிலையிலிருந்து அகற்றப்படுவாய். “அந்த நாளிலே, இல்க்கியாவின் மகன் எலியாக்கீம் என்னும் என் அடியவனை அழைப்பேன். உனது உடையை அவனுக்கு உடுத்தி, உனது சால்வையை அவனுடைய இடையில் கட்டி, உன்னிடம் இருந்த அதிகாரத்தை அவனிடம் ஒப்படைப்பேன். எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வீட்டாருக்கும் அவன் தகப்பனாயிருப்பான். தாவீதின் வீட்டுத் திறப்பை அவனிடம் கொடுப்பேன்; அவன் திறப்பதை யாராலும் மூட இயலாது, அவன் மூடியதை ஒருவராலும் திறக்கவும் இயலாது. ஒரு உறுதியான இடத்தில் அவனை ஒரு ஆணியைப்போல் அறைவேன்; அவன் தனது தகப்பன் வீட்டுக்கு ஒரு மகிமையுள்ள இருக்கையாய் இருப்பான். அவனுடைய தகப்பன் குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமான, சிறிய பாத்திரங்கள், கிண்ணங்கள் முதல் பெரிய குடங்கள் வரையுள்ள அனைத்து பாத்திரங்களைப்போல் பெரிய பொறுப்பு அவன்மேல் இருக்கும்.”

ஏசாயா 22:15-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரண்மனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்திற்குப்போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால், உயர்ந்த இடத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துவதுபோலக் யெகோவா உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாக உன்னை மூடிப்போடுவார். அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டிற்கு இகழ்ச்சியாக இருக்கும். உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் இடத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். அந்நாளிலே இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: உன் உடையை அவனுக்கு அணிவித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிமக்களுக்கும், யூதாவின் வம்சத்திற்கும் தகப்பனாயிருப்பான். தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். அவனை உறுதியான இடத்திலே ஆணியாக அடிப்பேன்; அவன் தன் தகப்பன் வீட்டிற்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள்.

ஏசாயா 22:15-24 பரிசுத்த பைபிள் (TAERV)

சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: செப்னா என்ற வேலைக்காரனிடம் போ, அந்த வேலைக்காரனே அரண்மனையின் மேலாள்: “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் குடும்பத்திலுள்ள யாராவது இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? ஏன் இங்கே ஒரு கல்லறையை உருவாக்கினாய்?” என்று அந்த வேலைக்காரனைக் கேள். அதற்கு ஏசாயா, “இந்த மனிதனைப் பாருங்கள்! இவன் தனது கல்லறையை உயர்ந்த இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறான். இந்த மனிதன் அவனது கல்லறையை அமைக்க பாறைக்குள் வெட்டிக்கொண்டிருக்கிறான். “மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப்போவாய்” என்று கூறினான். கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய ராஜா உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது. உன்னை உன் பதவியை விட்டுத் துரத்திவிடுவேன். உனது முக்கியமான வேலையிலிருந்து உன்னைப் புதிய ராஜா எடுத்து விடுவான். அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் குமாரனான எலியாக்கீமை அழைப்பேன். நான் உனது ஆடையை எடுத்து அந்த வேலைக்காரன் மீது போடுவேன். நான் அவனுக்கு உனது செங்கோலைக் கொடுப்பேன். நான் உனக்குரிய முக்கியமான வேலையை அவனுக்குக் கொடுப்பேன். அந்த வேலைக்காரன் எருசலேம் ஜனங்களுக்கும் யூதாவின் குடும்பத்திற்கும் ஒரு தந்தையைப்போல இருப்பான். “தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான். நான் மிகப்பலமான பலகையில் அடிக்கப்பட்ட ஆணியைப்போல அவனைப் பலமுள்ளவனாக்குவேன். அவன் தந்தையின் வீட்டிலுள்ள அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் கொண்ட பொருட்களெல்லாம் அவன்மேல் தொங்கும். முதியவர்களும், சிறுவர்களும் அவனைச் சார்ந்து இருப்பார்கள். அந்த ஜனங்கள் சிறு பாத்திரங்களும், தண்ணீர் நிரம்பிய பெரிய பாட்டில்களும் அவனுக்குமேல் தொங்குவதுபோல் இருக்கும்.

ஏசாயா 22:15-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால், உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார். அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும். உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான். தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பெளத்திரருடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள்.