ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 22:15-24

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 22:15-24 TAERV

சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: செப்னா என்ற வேலைக்காரனிடம் போ, அந்த வேலைக்காரனே அரண்மனையின் மேலாள்: “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் குடும்பத்திலுள்ள யாராவது இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? ஏன் இங்கே ஒரு கல்லறையை உருவாக்கினாய்?” என்று அந்த வேலைக்காரனைக் கேள். அதற்கு ஏசாயா, “இந்த மனிதனைப் பாருங்கள்! இவன் தனது கல்லறையை உயர்ந்த இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறான். இந்த மனிதன் அவனது கல்லறையை அமைக்க பாறைக்குள் வெட்டிக்கொண்டிருக்கிறான். “மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப்போவாய்” என்று கூறினான். கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய ராஜா உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது. உன்னை உன் பதவியை விட்டுத் துரத்திவிடுவேன். உனது முக்கியமான வேலையிலிருந்து உன்னைப் புதிய ராஜா எடுத்து விடுவான். அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் குமாரனான எலியாக்கீமை அழைப்பேன். நான் உனது ஆடையை எடுத்து அந்த வேலைக்காரன் மீது போடுவேன். நான் அவனுக்கு உனது செங்கோலைக் கொடுப்பேன். நான் உனக்குரிய முக்கியமான வேலையை அவனுக்குக் கொடுப்பேன். அந்த வேலைக்காரன் எருசலேம் ஜனங்களுக்கும் யூதாவின் குடும்பத்திற்கும் ஒரு தந்தையைப்போல இருப்பான். “தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான். நான் மிகப்பலமான பலகையில் அடிக்கப்பட்ட ஆணியைப்போல அவனைப் பலமுள்ளவனாக்குவேன். அவன் தந்தையின் வீட்டிலுள்ள அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் கொண்ட பொருட்களெல்லாம் அவன்மேல் தொங்கும். முதியவர்களும், சிறுவர்களும் அவனைச் சார்ந்து இருப்பார்கள். அந்த ஜனங்கள் சிறு பாத்திரங்களும், தண்ணீர் நிரம்பிய பெரிய பாட்டில்களும் அவனுக்குமேல் தொங்குவதுபோல் இருக்கும்.