ஏசாயா 1:4-18
ஏசாயா 1:4-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு, குற்றம் நிறைந்த மக்கள், தீயவர்களின் கூட்டம், கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்! இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள், இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும், உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே! தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்? உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை, நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆறாத புண்களும், அடிகாயங்களும், சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன. அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ, எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை. உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது; உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன. உங்கள் கண்முன்பதாகவே உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன; உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே! சீயோனின் மகள் திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும், வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும், முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள். எல்லாம் வல்ல யெகோவா நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம்; நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம். சோதோமின் ஆளுநர்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்! “உங்கள் ஏராளமான பலிகள் எனக்கு எதற்கு?” என யெகோவா கேட்கிறார். “செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன; காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என் முன்னிலையில் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டுவந்து, இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்? உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்! உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது. அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது. உங்களது அமாவாசை நாட்களையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவை எனக்கு சுமையாகிவிட்டன; நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன். நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது, நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்; அநேக ஜெபங்களைச் செய்தாலும், நான் செவிகொடுக்கமாட்டேன். “ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது! “உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி, தீமை செய்வதை நிறுத்துங்கள். சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்; விதவைக்காக வழக்காடுங்கள். “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்று யெகோவா கூறுகிறார். “உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்; அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும், பஞ்சைப்போல் வெண்மையாகும்.
ஏசாயா 1:4-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். சேனைகளின் யெகோவா நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
ஏசாயா 1:4-18 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேல் நாடு முழுவதும் குற்றங்களால் நிரம்பிற்று. இக்குற்றங்கள் ஜனங்கள் சுமக்கத்தக்க கனமிக்க பாரமாயிற்று. அந்த ஜனங்கள் பொல்லாத குடும்பத்தில் பிறந்த கெட்ட பிள்ளைகளைப்போல் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை விட்டு விலகினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான தேவனை அவமானப்படுத்திவிட்டனர். அவர்கள் அவரை விட்டுப்போய் அயலானைப்போல் நடந்துகொண்டார்கள். தேவன் கூறுகிறார்: ஏன் என் ஜனங்களாகிய உங்களைத் தொடர்ந்து தண்டித்து வருகிறேன்? நான் உங்களைத் தண்டித்தேன், ஆனால் நீங்களோ மாறவில்லை. நீங்கள் எனக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்து வருகிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு தலையும் இதயமும் நோயுற்றுவிட்டது. உங்கள் காலடியில் இருந்து உச்சந்தலைவரை உங்களது உடலின் ஒவ்வொரு பாகமும் காயமடைந்திருக்கிறது, வெட்டுப்பட்டுள்ளது, புண்ணாகியுள்ளது. நீங்கள் உங்கள் புண்களுக்காகக் கவலைப்படப்படவில்லை. உங்கள் காயங்கள் சுத்தப்படுத்தப்படவில்லை, மூடிவைக்கப்படவில்லை. உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. உங்கள் நகரங்கள் நெருப்பால் எரிக்கப்பட்டன. உங்கள் பகைவர்கள் உங்கள் நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டனர். படைகளால் அழிக்கப்பட்ட நாடு போன்று உங்கள் நிலங்கள் அழிக்கப்பட்டன. சீயோனின் குமாரத்தி (எருசலேம்), இப்பொழுது, திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட காலியான கூடாரம்போல் இருக்கின்றாள். அது வெள்ளரித் தோட்டத்தில் உள்ள ஒரு பழைய வீடு போலவும் காணப்படுகின்றது. அது பகைவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நகரம்போல் உள்ளது. இது உண்மையானாலும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சில ஜனங்களைத் தொடர்ந்து வாழ அனுமதித்தார். நாம் சோதோம் மற்றும் கொமோராபோல முழுவதுமாக அழிக்கப்படவில்லை. சோதோமின் தலைவர்களாகிய நீங்கள் கர்த்தர் சொல்லும் செய்தியைக் கேளுங்கள்! கொமோராவின் ஜனங்களாகிய நீங்கள், தேவன் சொல்லும் போதனைகளைக் கேளுங்கள். தேவன் கூறுகிறார், “நீங்கள் ஏன் தொடர்ந்து எனக்கு இத்தனை பலி கொடுக்கிறீர்கள்? நான் போதுமான அளவிற்கு உங்களிடமிருந்து ஆடு, காளை, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பின் பலிகளையும் பெற்றுவிட்டேன். என்னைச் சந்திக்க வரும்பொழுது சகலத்தையும் என் பிரகாரத்தில் மிதிக்கிறீர்கள். இப்படி செய்யும்படி உங்களுக்குச் சொன்னது யார்? “தொடர்ந்து எனக்குப் பயனற்ற பலிகளைக் கொண்டுவர வேண்டாம். நீங்கள் எனக்குத் தருகிற நறுமணப் பொருட்களை நான் வெறுக்கிறேன். புது மாதப்பிறப்பின் நாளில், ஓய்வு நாளில், விடுமுறை நாட்களில் நீங்கள் கொடுக்கும் விருந்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த கூட்டங்களில் நீங்கள் செய்யும் தீமைகளை நான் வெறுக்கிறேன். நான் முழுமையாக உங்கள் மாதக்கூட்டங்களையும் பண்டிகைகளையும் வெறுக்கிறேன். அவை எனக்குப் பெரும் பாரமாக உள்ளன. அப்பாரங்களைத் தாங்கி நான் சோர்ந்து போனேன். “நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி என்னிடம் ஜெபம் செய்ய வருகிறீர்கள். ஆனால், நான் உங்களை பார்க்க மறுக்கிறேன். நீங்கள் அதிகமதிகமாய் ஜெபங்களை சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைக் கவனிக்க மறுக்கிறேன். ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தால் கறைப்பட்டுள்ளன. “உங்களைக் கழுவுங்கள். உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களை நிறுத்துங்கள். நான் அத்தீயச் செயல்களைப் பார்க்க விரும்பவில்லை. தவறுகளை நிறுத்துங்கள்! நல்லவற்றைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களோடு நேர்மையாக இருங்கள். மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்களைத் தண்டியுங்கள். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு உதவுங்கள். கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு உதவுங்கள்.” கர்த்தர் மேலும், “வாருங்கள், நாம் இதைப்பற்றி விவாதிப்போம். உங்களது பாவங்கள் இரத்தினக் கம்பளம்போல் சிவப்பாக இருக்கிறது. ஆனால், அவைகள் கழுவப்பட்டு நீங்கள் பனிபோன்று வெண்மையாகலாம். உங்கள் பாவங்கள் பிரகாசமான சிவப்பாக இருக்கின்றன. ஆனால், நீங்கள் வெள்ளை கம்பளியைப்போன்று வெண்மையாக முடியும்.
ஏசாயா 1:4-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாக பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது. சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள். சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம், சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள். நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.