ஏசாயா 1:4-18

ஏசாயா 1:4-18 TCV

ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு, குற்றம் நிறைந்த மக்கள், தீயவர்களின் கூட்டம், கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்! இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள், இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும், உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே! தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்? உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை, நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆறாத புண்களும், அடிகாயங்களும், சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன. அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ, எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை. உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது; உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன. உங்கள் கண்முன்பதாகவே உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன; உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே! சீயோனின் மகள் திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும், வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும், முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள். எல்லாம் வல்ல யெகோவா நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம்; நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம். சோதோமின் ஆளுநர்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்! “உங்கள் ஏராளமான பலிகள் எனக்கு எதற்கு?” என யெகோவா கேட்கிறார். “செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன; காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் என் முன்னிலையில் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டுவந்து, இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்? உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்! உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது. அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது. உங்களது அமாவாசை நாட்களையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவை எனக்கு சுமையாகிவிட்டன; நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன். நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது, நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்; அநேக ஜெபங்களைச் செய்தாலும், நான் செவிகொடுக்கமாட்டேன். “ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது! “உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி, தீமை செய்வதை நிறுத்துங்கள். சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்; விதவைக்காக வழக்காடுங்கள். “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்று யெகோவா கூறுகிறார். “உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்; அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும், பஞ்சைப்போல் வெண்மையாகும்.