எபிரெயர் 7:11-28

எபிரெயர் 7:11-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது. இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை. நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை. மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது. அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார். ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முந்திய கட்டளை பலவீனமானதாயும் பயனற்றதாயும் இருந்ததால் அது மாற்றப்பட்டது. மோசேயின் சட்டமோ எதையும் முழுநிறைவுள்ளதாய் செய்வதில்லை. ஆனால் நாம் இப்பொழுது இறைவனை அணுகும்படி ஒரு மேன்மையான எதிர்பார்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், மற்றவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாகிறார்கள். ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’ ” இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார். மேலும், அநேக ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யமுடியாதபடி மரணம் அவர்களைத் தடுத்தது. ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். ஆதலால், தம் மூலமாக இறைவனிடத்தில் வருகிறவர்களை பரிபூரணமாய் இரட்சிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். ஏனெனில், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவதற்காக இயேசு என்றென்றும் வாழ்கிறார். இப்படிப்பட்ட பிரதான ஆசாரியர், நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கிறார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கிறார். மற்ற பிரதான ஆசாரியர்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப்போல், அப்படி இயேசு பலிசெலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தபோது, அவர்களுடைய பாவங்களுக்காக ஒரேமுறை பலியானார். ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது.

எபிரெயர் 7:11-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது. அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார். அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள். ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார். பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார். நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது.

எபிரெயர் 7:11-28 பரிசுத்த பைபிள் (TAERV)

லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம். இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார். “‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’ என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார். மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” என்றும் அவர் சொன்னார். மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும். ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும். இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார். எனவே தன் மூலமாக தேவனிடம் வருகிறவர்களை இயேசுவால் முழுமையாக இரட்சிக்க முடியும். ஏனெனில் நமக்காகப் பரிந்து பேச இயேசு எப்பொழுதும் வாழ்கிறார். ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது. மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.

எபிரெயர் 7:11-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்