எபி 7:11-28

எபி 7:11-28 IRVTAM

அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது. அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம். அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார். அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள். ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார். பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார். நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்