எபிரெயர் 7:11-17

எபிரெயர் 7:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

எபிரெயர் 7:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது. இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை. நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை. மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது. அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார். ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எபிரெயர் 7:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன? ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே. அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது. அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார்.

எபிரெயர் 7:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.