எபிரெயர் 7:11-17

எபிரெயர் 7:11-17 TCV

லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது. இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை. நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை. மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது. அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார். ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எபிரெயர் 7:11-17 க்கான வீடியோ