எபிரெயர் 11:23-29

எபிரெயர் 11:23-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்து போனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள்.

எபிரெயர் 11:23-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை. விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான். விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான். தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள்.

எபிரெயர் 11:23-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து, நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான். விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.

எபிரெயர் 11:23-29 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர். மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய குமாரத்தியின் குமாரன் என அழைக்கப்படுவதை மறுத்தான். பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான். மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் ராஜாவின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான். மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்