எபிரெயர் 11:23-29

எபிரெயர் 11:23-29 TCV

மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை. விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான். விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான். தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான். விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள்.

எபிரெயர் 11:23-29 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்