எபிரெயர் 10:5-18
எபிரெயர் 10:5-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்; தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை. புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ” முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன. பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார். இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான். ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது: “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார்.” பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.
எபிரெயர் 10:5-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம். அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்: அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு, அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
எபிரெயர் 10:5-18 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர், “நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை. ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர். மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது. பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது. பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன். நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.” “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும், மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. ஆனால் கிறிஸ்து மக்களின் பாவங்களைப் போக்க ஒரே ஒரு முறைதான் தன்னைப் பலிகொடுத்தார். என்றென்றைக்கும் அது போதுமானதாயிற்று. அவர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்துகொண்டார். அவர் இப்பொழுது தனது எதிரிகளைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரே ஒரு பலியின் மூலம் அவர் என்றென்றைக்கும் தம் மக்களை முழுமையாக்கிவிட்டார். அம்மக்களே பரிசுத்தமாக்கப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர், “பிறிதொரு காலத்தில் அவர்களோடு நான் செய்யப்போகிற உடன்படிக்கை இதுதான். என் சட்டங்களை அவர்கள் இதயங்களில் பதியவைப்பேன். மேலும் அவற்றை அவர்களின் மனங்களில் எழுதுவேன்” என்று சொன்னார். மேலும், “அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன். மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்” ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.
எபிரெயர் 10:5-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்: அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலிசெலுத்தப்படுவதில்லையே.