எபிரெயர் 10:5-18

எபிரெயர் 10:5-18 TCV

இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்; தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை. புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’ ” முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன. பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார். இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான். ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார். அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது: “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார்.” பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.