ஆதியாகமம் 7:1-12

ஆதியாகமம் 7:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன். மேலும், நீ சுத்தமான விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடியையும், பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும். இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உண்டாக்கிய எல்லா உயிரினங்களையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்துப்போடுவேன்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தான். பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது. பெருவெள்ளத்துக்குத் தப்பும்படி நோவாவும், அவன் மனைவியும், அவனுடைய மகன்களும், அவர்களின் மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக, இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. ஏழு நாட்களுக்குப்பின், பூமியின்மேல் பெருவெள்ளம் வந்தது. நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது.

ஆதியாகமம் 7:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும், ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார். நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன. ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது. நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.

ஆதியாகமம் 7:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் நோவாவிடம், “நீ நல்லவன் என்பதை, எல்லோரும் கெட்டுப்போன இக்காலத்திலும் கண்டிருக்கிறேன். ஆகையால் உனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கப்பலுக்குள் செல். பலிக்குரிய சுத்தமான விலங்குகளில் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். மற்ற மிருகங்களில் ஒரு ஜோடி போதும். இவற்றையெல்லாம் உனது கப்பலுக்குள் சேர்த்து வை. பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும். இன்றிலிருந்து ஏழு நாட்களானதும் பூமியில் பெருமழை பொழியச் செய்வேன். 40 இரவும் 40 பகலுமாக தொடர்ந்து மழை பொழியும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்துபோகும். என்னால் படைக்கப்பட்ட அனைத்தும் அழியும்” என்றார். நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான். மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது. நோவாவும் அவனது குடும்பத்தினரும் கப்பலுக்குள் சென்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்தனர். நோவாவோடு அவனது மனைவியும் அவனது குமாரர்களும், குமாரர்களின் மனைவியரும் இருந்தனர். பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும், நோவாவோடு கப்பலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாக தேவனுடைய ஆணையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. ஏழு நாட்களானதும் வெள்ளப்பெருக்கு துவங்கியது. மழை தொடர்ந்து பெய்தது. இரண்டாவது மாதத்தின் பதினேழாவது நாள் பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் எல்லாம் திறந்து பீறிட்டுக் கிளம்பின. அன்று பெருமழையும் சேர்ந்து கொட்ட ஆரம்பித்தது. அது வானத்தின் ஜன்னல்கள் திறந்துகொண்டது போன்று இருந்தது. நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக மழை தொடர்ந்து பெய்தது. முதல் நாளே நோவாவும் அவனது மனைவியும் அவன் குமாரர்களான சேம், காம், யாப்பேத் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் கப்பலுக்குள் சென்றுவிட்டனர். அப்போது நோவாவுக்கு 600 வயது.

ஆதியாகமம் 7:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார். நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.