ஆதியாகமம் 7:1-12

ஆதியாகமம் 7:1-12 TCV

அதன்பின் யெகோவா நோவாவிடம், “நீயும் உன் முழுக் குடும்பமும் பேழைக்குள் போங்கள், ஏனெனில், உன்னையே நான் இந்த சந்ததியில் நீதியானவனாகக் கண்டேன். மேலும், நீ சுத்தமான விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும், சுத்தமில்லாத விலங்குகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு ஜோடியையும், பறவைகளில் ஒவ்வொரு வகையிலுமிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு ஜோடிகளையும் உன்னுடன் எடுத்துக்கொள்; ஏனெனில் பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகைகள் தொடர்ந்து உயிர் வாழவேண்டும். இன்னும் ஏழு நாட்களில், நாற்பது இரவுகளும் நாற்பது பகல்களும் தொடர்ந்து பூமியின்மேல் மழையை அனுப்பி, நான் உண்டாக்கிய எல்லா உயிரினங்களையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து அழித்துப்போடுவேன்” என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நோவா செய்தான். பூமியின்மேல் பெருவெள்ளம் உண்டானபோது, நோவாவுக்கு 600 வயதாய் இருந்தது. பெருவெள்ளத்துக்குத் தப்பும்படி நோவாவும், அவன் மனைவியும், அவனுடைய மகன்களும், அவர்களின் மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள். சுத்தமானதும், அசுத்தமானதுமான மிருகங்கள், பறவைகள், நிலத்தில் ஊரும் உயிரினங்கள் யாவும் ஜோடி ஜோடியாக, இறைவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக நோவாவிடம் வந்து பேழைக்குள் சென்றன. ஏழு நாட்களுக்குப்பின், பூமியின்மேல் பெருவெள்ளம் வந்தது. நோவாவுக்கு 600 வயதான அந்த வருடம், இரண்டாம் மாதம், பதினேழாம் நாள் பூமியின் அதிக ஆழத்திலிருந்த ஊற்றுகள் எல்லாம் வெடித்துப் பீறிட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன. நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் பூமியில் அடைமழை பெய்தது.