ஆதியாகமம் 6:1-13

ஆதியாகமம் 6:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பூமியில் மனிதர் பெருகத் தொடங்கியபோது, அவர்களுக்கு மகள்கள் பிறந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களுடைய மகள்கள் அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். அப்பொழுது யெகோவா, “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவர்கள் அழிவுக்குரிய மாம்சமே; அவர்களின் வாழ்நாள் நூற்று இருபது வருடங்களே” என்றார். அதே நாட்களில், நெபிலிம் என்னும் இராட்சதர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைவனின் மகன்கள் எனப்பட்டவர்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் அவர்கள் இருந்தார்கள். அதற்கு பின்பும் அவர்கள் இருந்தார்கள். அவர்களே முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதரான மாவீரர்களாய் இருந்தவர்கள். பூமியில் மனிதனின் கொடுமைகள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கின்றன என்பதையும், அவன் எப்பொழுதும் தன் இருதய சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் தீமையின் பக்கம் மட்டுமே சாய்கிறான் என்பதையும் யெகோவா கண்டார். அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது. அப்பொழுது யெகோவா, “நான் படைத்த இந்த மனுக்குலத்தைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்; மனிதரோடு விலங்குகளையும், நிலத்தில் ஊரும் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அழித்துப்போடுவேன்; அவர்களை உண்டாக்கியதைக் குறித்து எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். ஆனால் நோவாவுக்கு யெகோவாவினுடைய பார்வையில் தயவு கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு இதுவே: நோவா நீதியான மனிதனும் தன் காலத்தில் வாழ்ந்த மக்களில் குற்றமற்றவனுமாய் இருந்தான்; அவன் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள். பூமி, இறைவனின் பார்வையில் சீர்கெட்டதாகவும் வன்முறையால் நிறைந்ததாகவும் இருந்தது. பூமியில் உள்ள மனிதர் எல்லோரும் சீர்கெட்ட வழியில் நடந்ததால், பூமி எவ்வளவாய் சீர்கெட்டுவிட்டது என்று இறைவன் கண்டார். எனவே இறைவன் நோவாவிடம், “நான் எல்லா உயிரினங்களையும் அழிக்க முடிவு செய்துள்ளேன். ஏனெனில், பூமி மனிதர்களின் வன்முறையால் நிறைந்துவிட்டது. அதனால் நான் அவர்களையும் பூமியையும் நிச்சயமாய் அழிக்கப்போகிறேன்.

ஆதியாகமம் 6:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது: தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார். அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள். மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான். நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.

ஆதியாகமம் 6:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர். தேவ குமாரர்கள் மானிடப் பெண்களை அதிக அழகுள்ளவர்கள் எனக் கண்டு, தாங்கள் விரும்பியபடி பெண்களைத் தேர்ந்தெடுத்து மணந்துகொண்டனர். அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராட்சதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர். கர்த்தர், “ஜனங்கள் மனிதப்பிறவிகளே, அவர்களால் என்றென்றைக்கும் எனது ஆவி துன்புறும்படி அனுமதிக்கமாட்டேன். அவர்கள் 120 ஆண்டுகள் வாழும்படி அனுமதிக்கிறேன்” என்றார். பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதை கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தார். கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார். எனவே கர்த்தர், “பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்றார். ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான். இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான். அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று குமாரர்கள் இருந்தனர். தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர். எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன்.

ஆதியாகமம் 6:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள் அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.