ஆதி 6:1-13

ஆதி 6:1-13 IRVTAM

மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது: தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார். அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள். மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு, தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது. அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார். நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான். நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.