ஆதியாகமம் 50:15-26

ஆதியாகமம் 50:15-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தங்கள் தகப்பன் மரணமடைந்தபின் யோசேப்பின் சகோதரர், “யோசேப்பு எங்கள்மேல் பழிவாங்க எண்ணங்கொண்டு, முன்பு நாம் யோசேப்புக்குச் செய்த எல்லாத் தீமைகளுக்காக தீங்கு செய்தால் என்ன செய்வது?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அதனால் அவர்கள் யோசேப்பிடம், “உம்முடைய தகப்பன் இறப்பதற்குமுன் இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார். அதாவது, நீங்கள் யோசேப்பிடம் போய் நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள். உன் சகோதரரின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் அவர்கள் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிக்க வேண்டும் என, நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்” என்றார்கள். “உமது தகப்பனுடைய இறைவனின் அடியாராகிய நாங்கள் செய்த பாவங்களை இப்பொழுது எங்களுக்குத் தயவாய் மன்னியும்” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான். யோசேப்பின் சகோதரர் அவனிடம் வந்து, அவனுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “நாங்கள் உமது அடிமைகள்” என்றார்கள். யோசேப்பு அவர்களிடம், “பயப்படவேண்டாம்; நான் என்ன இறைவனா? நீங்கள் எனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டீர்கள். ஆனால், இறைவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, பல உயிர்களைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அதை நன்மையாக மாற்றினார். ஆகையால் பயப்படவேண்டாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையானவற்றை எல்லாம் நான் கொடுப்பேன்” என உறுதியளித்துத் தயவாகப் பேசினான். யோசேப்பு தன் தகப்பனின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயதுவரை உயிர் வாழ்ந்தான். யோசேப்பு, எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் கண்டான். அப்பிள்ளைகள் எல்லோரும், மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியிலே வளர்ந்தார்கள். பின்பு யோசேப்பு தன் சகோதரரிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் உங்களுக்கு நிச்சயமாய் உதவி செய்வார்; ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நாட்டுக்கு அவர் உங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவார்” என்றான். பின்னும் யோசேப்பு அவர்களிடம், “நிச்சயமாய் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். அப்பொழுது நீங்கள் என்னுடைய எலும்புகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான். யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.

ஆதியாகமம் 50:15-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: “ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான்” என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, “உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும்” என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: “இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள்” என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; “நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான். யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: “நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான். யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

ஆதியாகமம் 50:15-26 பரிசுத்த பைபிள் (TAERV)

யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர். எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார். அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர். இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான். அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர். பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை. எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான். எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான். யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற குமாரன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான். மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான். பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான். யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.

ஆதியாகமம் 50:15-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.