ஆதி 50:15-26

ஆதி 50:15-26 IRVTAM

தங்களுடைய தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர்கள் கண்டு: “ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நம்மை பழிவாங்குவான்” என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, “உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும்” என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: “இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள்” என்றார்கள். யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; “நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன்” என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடு ஆதரவாகப் பேசினான். யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான். யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: “நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்திற்குப் போகச்செய்வார் என்று சொன்னதுமல்லாமல்; தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டான். யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆதி 50:15-26