ஆதியாகமம் 49:1-9

ஆதியாகமம் 49:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள். “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய். “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள். நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள். அவர்களுடைய பயங்கரமான கோபமும், கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன். “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள். யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்?

ஆதியாகமம் 49:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். யூதா பெரிய சிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

ஆதியாகமம் 49:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன். “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள். “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. நீயே வல்லமையும் மரியாதையும் உள்ள குமாரனாக விளங்கியிருக்கலாம். ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய். நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன். நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன். “சிமியோனும் லேவியும் சகோதரர்கள். அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள். இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள். அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை. அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள். அவர்களின் கோபமே ஒரு சாபம். அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள். யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள். “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள். நீ உன் பகைவர்களை வெல்வாய். உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள். யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன். என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ. நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும் தொந்தரவு செய்யமுடியாது.

ஆதியாகமம் 49:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன். யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?