ஆதியாகமம் 49:1-9

ஆதியாகமம் 49:1-9 TCV

பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள். “ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய். “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள். நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள். அவர்களுடைய பயங்கரமான கோபமும், கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன். “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள். யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; அவனை எழுப்பத் துணிபவன் யார்?