ஆதியாகமம் 48:1-13

ஆதியாகமம் 48:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தகப்பன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான். “உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கிறான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே எல்லாம் வல்ல இறைவன் எனக்குமுன் தோன்றி, என்னை ஆசீர்வதித்தார். அவர் என்னிடம், ‘நான் உன்னை இனவிருத்தியில் பெருகப்பண்ணி எண்ணிக்கையில் அதிகரிப்பேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார். “எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்திற்கு வருவதற்குமுன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் இப்பொழுதிலிருந்து என்னுடைய மகன்களாக எண்ணப்படுவார்கள்; ரூபனும், சிமியோனும் என் மகன்களாய் இருப்பதுபோல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்களாய் இருப்பார்கள். அவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அந்த பிள்ளைகள் சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள், தங்கள் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் இடங்களிலிருந்தே கிடைக்கும். நான் பதானைவிட்டுத் திரும்பி வருகையில், எப்பிராத்தாவுக்குச் சற்று தூரத்தில், கானான் நாட்டில் நாங்கள் வழியில் இருக்கும்போதே, ராகேல் இறந்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியின் அருகே நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான். இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான். அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான். வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான். யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான். பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான்.

ஆதியாகமம் 48:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனார் வியாதியாயிருக்கிறார்” என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு மகன்களாகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடு அழைத்துப்போனான். “இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார்” என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். யாக்கோபு யோசேப்பை நோக்கி: “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து: நான் உன்னைப் பலுகவும் பெருகவும் செய்து, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுப்பேன் என்று என்னோடு சொன்னார். நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரர்களுடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சொத்தில் பங்குபெறுவார்கள். நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன்” என்றான். இஸ்ரவேல் யோசேப்பின் மகன்களைப் பார்த்து: “இவர்கள் யார்” என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: “இவர்கள் இந்த இடத்தில் தேவன் எனக்கு அருளின மகன்கள்” என்றான். அப்பொழுது அவன்: “நான் அவர்களை ஆசீர்வதிக்க அவர்களை என் அருகில் கொண்டுவா” என்றான். முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தால், அவன் நன்றாகப் பார்க்கமுடியாமலிருந்தது. அவர்களை அவனருகில் சேரச்செய்தான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தம்செய்து அணைத்துக்கொண்டான். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: “உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார்” என்றான். அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடச்செய்து, அவனுடைய முகத்திற்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.

ஆதியாகமம் 48:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும் தன் இரண்டு குமாரர்களையும் அவனிடம் அழைத்து சென்றான். யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் குமாரன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான். அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார். தேவன் என்னிடம், ‘உன்னைப் பெரிய குடும்பமாக செய்வேன். நிறைய குழந்தைகளைத் தருவேன். நீங்கள் பெரிய இனமாக வருவீர்கள். உன் குடும்பம் இந்த நிலத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும்’ என்றார். இப்போது உனக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள். எனவே இந்த இருவரும் என் பிள்ளைகள். எனக்குரிய அனைத்தையும் இவர்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். ஆனால் உனக்கு வேறு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் உன் பிள்ளைகள். ஆனால் அவர்கள் மனாசேக்கும் எப்பிராயீமுக்கும் பிள்ளைகள் போல் இருப்பார்கள். எனவே, வருங்காலத்தில் இவர்களுக்குரியவற்றை அவர்களும் பங்கிட்டுக்கொள்வார்கள். பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.) பின் இஸ்ரவேல் யோசேப்பின் பிள்ளைகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என்று கேட்டார். யோசேப்பு தந்தையிடம், “இவர்கள் என் பிள்ளைகள், எனக்குத் தேவன் கொடுத்த குமாரர்கள்” என்றான். இஸ்ரவேல் அவனிடம், “என்னிடம் அவர்களை அழைத்து வா, நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றான். இஸ்ரவேலுக்கு வயதானதால் கண்களும் சரியாகத் தெரியவில்லை. எனவே, யோசேப்பு தன் குமாரர்களை மிக அருகில் அழைத்து வந்தான். இஸ்ரவேல் அவர்களை முத்தமிட்டு அணைத்துகொண்டான். பிறகு அவன் யோசேப்பிடம், “நான் உனது முகத்தை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தேவன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்கும்படி செய்துவிட்டார்” என்றான். பிறகு யோசேப்பு தன் குமாரர்களை இஸ்ரவேலின் மடியில் இருந்து இறக்கிவிட்டான். அவர்கள் அவரைக் குனிந்து வணங்கினார்கள். யோசேப்பு எப்பிராயீமை தனது வலது பக்கத்திலும் மனாசேயை தனது இடது பக்கத்திலும் அமர வைத்தான்.

ஆதியாகமம் 48:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான். இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத்திடப் படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து: நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார். நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள். நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான். இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான். யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான். இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான். அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.