ஆதியாகமம் 45:21-28
ஆதியாகமம் 45:21-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலின் மகன்கள் அவ்வாறே செய்தார்கள். யோசேப்பு பார்வோன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான உணவுகளையும் கொடுத்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல் வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தகப்பனுக்கு பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மேல் தானியம், அப்பம் அவருடைய பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். அதன்பின் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்யவேண்டாம்!” என்றான். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கிறான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்குச் சொன்னபோதும், யாக்கோபை எகிப்திற்கு அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டபோதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. அப்பொழுது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என இப்பொழுது நான் நம்புகிறேன்! நான் சாகிறதற்கு முன் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான்.
ஆதியாகமம் 45:21-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலின் மகன்கள் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, பயணத்திற்கு ஆகாரத்தையும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று உடைகளையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று உடைகளையும் கொடுத்தான். அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்திற்கு வந்து: யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. அப்பொழுது இஸ்ரவேல்: என் மகனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.
ஆதியாகமம் 45:21-28 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே இஸ்ரவேலின் பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். பார்வோன் மன்னன் சொன்னது போல் நல்ல வண்டிகளையும், பயணத்திற்கு வேண்டிய உணவையும் யோசேப்பு கொடுத்து அனுப்பினான். சகோதரர் அனைவருக்கும் யோசேப்பு அழகான ஆடைகளைக் கொடுத்தான். ஆனால் யோசேப்பு பென்யமீனுக்கு மட்டும் ஐந்து ஜோடி ஆடைகளையும், 300 வெள்ளிக் காசுகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தந்தைக்கும் அன்பளிப்புகளைக் கொடுத்து அனுப்பினான். 10 கழுதைகள் சுமக்குமளவு எகிப்திலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொடுத்தான். 10 பெண் கழுதைகள் சுமக்கும்படி உணவுப் பொருட்களும், ரொட்டியும் பிற பொருட்களும் தன் தந்தையார் திரும்பிவரும் பயணத்திற்குப் பயன்பட கொடுத்தான். பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது “நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்” என்றான். எனவே, சகோதரர்கள் எகிப்தை விட்டு கானான் பகுதிக்குத் தந்தையிடம் போனார்கள். அவர்கள் அவரிடம், “யோசேப்பு உயிரோடு இருக்கிறான் அவன் எகிப்து நாடு முழுவதிற்கும் ஆளுநராக இருக்கிறான்” என்றனர். இந்தச் செய்தியைக் கேட்டதும் யாக்கோபு புரியாமலிருந்தான். முதலில் அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்னதை எல்லாம் சொன்னார்கள். தன்னை அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பியிருந்த வண்டிகளையெல்லாம் பார்த்தான். பிறகு யாக்கோபு புத்துணர்வு பெற்று மிக்க சந்தோஷமடைந்தான். “இப்போது உங்களை நம்புகிறேன், என் குமாரன் யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான். மரிப்பதற்கு முன்னால் அவனைப் பார்க்கப் போவேன்” என்று இஸ்ரவேல் கூறினான்.
ஆதியாகமம் 45:21-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து: யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.