ஆதியாகமம் 45:21-28

ஆதியாகமம் 45:21-28 TCV

இஸ்ரயேலின் மகன்கள் அவ்வாறே செய்தார்கள். யோசேப்பு பார்வோன் கட்டளையிட்டபடியே அவர்களுக்கு வண்டிகளையும், அவர்களுடைய பயணத்திற்குத் தேவையான உணவுகளையும் கொடுத்தான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புதிய உடைகளையும் கொடுத்தான், பென்யமீனுக்கோ முந்நூறு சேக்கல் வெள்ளியையும், ஐந்து உடைகளையும் கொடுத்தான். யோசேப்பு தன் தகப்பனுக்கு பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறந்த பொருட்கள், பத்துப் பெண் கழுதைகளின்மேல் தானியம், அப்பம் அவருடைய பயணத்திற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை அனுப்பினான். அதன்பின் அவன் தன் சகோதரர்களை வழியனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்களிடம், “நீங்கள் வழியில் வாக்குவாதம் செய்யவேண்டாம்!” என்றான். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு கானானில் வசிக்கும் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம், “யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான்! உண்மையில், அவனே எகிப்து முழுவதற்கும் ஆளுநனாகவும் இருக்கிறான்” என்றார்கள். அதைக் கேட்டதும் யாக்கோபு திகைத்துப் போனான்; அவன் அவர்களை நம்பவில்லை. ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்ன எல்லாவற்றையும் தங்கள் தகப்பனுக்குச் சொன்னபோதும், யாக்கோபை எகிப்திற்கு அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பிய வண்டிகளைக் கண்டபோதும் அவனுடைய ஆவி புத்துயிர் பெற்றது. அப்பொழுது இஸ்ரயேல், “என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என இப்பொழுது நான் நம்புகிறேன்! நான் சாகிறதற்கு முன் அவனைப் போய் பார்ப்பேன்” என்றான்.