ஆதியாகமம் 41:46-57

ஆதியாகமம் 41:46-57 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷ பஞ்சம் தொடங்கினது; சகலதேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:46-57 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசேப்பு எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு பணிபுரியத் தொடங்கியபோது, அவன் முப்பது வயதுடையவனாய் இருந்தான். யோசேப்பு பார்வோன் முன்னிலையில் இருந்து புறப்பட்டுப்போய், எகிப்து முழுவதையும் சுற்றிப் பயணம் செய்தான். அப்படியே செழிப்பான ஏழு வருடங்களில் நாடு மிகுதியான விளைச்சலைக் கொடுத்தது. செழிப்பான அந்த ஏழு வருடங்களில் எகிப்தில் விளைந்த தானியங்களை, யோசேப்பு பட்டணங்களில் சேகரித்து வைத்தான். ஒவ்வொரு பட்டணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வயல்களில் விளைந்த தானியங்களைச் சேர்த்துவைத்தான். யோசேப்பு தானியத்தைக் கடலின் மணலைப்போல் பெருமளவாகச் சேர்த்துவைத்தான். அது கணக்கிட முடியாதபடி மிக அதிகமாக இருந்தபடியால், பின்பு அவன் பதிவுசெய்வதை நிறுத்திவிட்டான். பஞ்சமுள்ள வருடங்கள் தொடங்குவதற்கு முன்பே யோசேப்புக்கும் ஓன் பட்டணத்தின் ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்துக்கும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அப்பொழுது யோசேப்பு, “இறைவன் என் தொல்லைகளையும், என் தகப்பன் வீட்டையும் மறக்கச்செய்தார்” என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே எனப் பெயரிட்டான். “நான் துன்பப்பட்ட நாட்டிலே இறைவன் என்னைச் செழிக்கப்பண்ணினார் என்று சொல்லி, தன் இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் எனப் பெயரிட்டான்.” எகிப்தின் செழிப்பான வளம் நிறைந்த ஏழு வருடங்களும் முடிவுற்றன. அதன்பின் யோசேப்பு சொல்லியிருந்தது போலவே, பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் ஆரம்பமாகின. மற்ற எல்லா நாடுகளிலும் பஞ்சம் உண்டானது, ஆனால் எகிப்து முழுவதிலும் உணவு இருந்தது. எகிப்தியர் எல்லோரும் பஞ்சத்தை அனுபவிக்கத் தொடங்கியபோது, பார்வோனிடம் உணவு கேட்டு அழுதார்கள். பார்வோன் எல்லா எகிப்தியரிடமும், “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்றான். எகிப்து முழுவதிலும் பஞ்சம் பரவியபோது, யோசேப்பு எல்லா களஞ்சியங்களையும் திறந்து, தானியத்தை எகிப்தியருக்கு விற்றான். ஏனெனில், பஞ்சம் எகிப்து முழுவதும் கொடியதாயிருந்தது. உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், எல்லா நாட்டினரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:46-57 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான். இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள். யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான். எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது. அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 41:46-57 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்புக்கு அப்போது 30 வயது. அவன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டான். ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது. யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான். யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது. யோசேப்பின் மனைவி ஆஸ்நாத்து ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. முதலாண்டு பஞ்சம் வருவதற்கு முன்னால் அவளுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். முதல் குமாரனுக்கு மனாசே என்று பேரிட்டான். ஏனென்றால், “தேவன் என் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்தார். என் வீட்டையும் மறக்கச் செய்துவிட்டார்” என்றான். யோசேப்பு இரண்டாவது குமாரனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” என்று சொல்லி இந்தப் பெயரை வைத்தான். ஏழு ஆண்டுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தன. அந்த ஆண்டுகள் முடிந்தன. அதன் பிறகு யோசேப்பு சொன்னதைப்போலவே பஞ்ச காலம் துவங்கியது. எந்த நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விளையவில்லை. ஆனால் எகிப்தில் உணவுப் பொருட்கள் ஏராளமாக சேமிக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் யோசேப்பின் திட்டம். பஞ்சம் துவங்கியதும் ஜனங்கள் பார்வோனிடம் வந்து உணவுக்கு அழுதனர். பார்வோன் ஜனங்களிடம், “நீங்கள் போய் யோசேப்பிடம் என்ன செய்யலாம் எனக் கேளுங்கள்” என்றான். எங்கும் பஞ்சம் அதனால் யோசேப்பு ஜனங்களுக்குச் சேமிப்பிலிருந்து தானியத்தை எடுத்துக் கொடுத்தான். சேர்த்து வைத்த தானியங்களை யோசேப்பு எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் மேலும் மோசமாகியது. எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.