ஆதி 41:46-57

ஆதி 41:46-57 IRVTAM

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். பரிபூரணமுள்ள ஏழு வருடங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. அந்த ஏழு வருடங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேகரித்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் சேமித்துவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்து தானியங்களைச் சேமித்துவைத்தான். இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள். யோசேப்பு: என் வருத்தம் அனைத்தையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பெயரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான். எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருடங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியிருந்தபடி ஏழுவருட பஞ்சம் தொடங்கினது; அனைத்துதேசங்களிலும் பஞ்சம் உண்டானது; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, மக்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி முறையிட்டார்கள்; அதற்கு பார்வோன்: “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்” என்று எகிப்தியர்கள் எல்லோருக்கும் சொன்னான். தேசமெங்கும் பஞ்சம் உண்டானதால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவர அதிகமானது. அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.