ஆதியாகமம் 4:15-26
ஆதியாகமம் 4:15-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு யெகோவா, “அப்படியல்ல; காயீனைக் கொல்பவன் எவனிடமும் ஏழுமடங்கு பழிவாங்கப்படும்” என்று அவனுக்குச் சொன்னார். பின்பு யெகோவா அவனைக் காண்பவர்கள் அவனைக் கொன்றுவிடாதபடி, அவன்மேல் ஓர் அடையாளத்தை வைத்தார். அப்பொழுது காயீன் யெகோவாவின் முன்னிலையிலிருந்து சென்று, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத் என்னும் நாட்டில் குடியிருந்தான். பின்பு காயீன் தன் மனைவியுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். பின்பு காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதற்கு தன் மகனின் பெயரின்படி ஏனோக் என்று பெயரிட்டான். ஏனோக்கிற்கு ஈராத் பிறந்தான், ஈராத் மெகுயயேலின் தகப்பனும், மெகுயயேல் மெத்தூசயேலின் தகப்பனும், மெத்தூசயேல் லாமேக்கின் தகப்பனும் ஆனார்கள். லாமேக் இரு பெண்களைத் திருமணம் செய்தான். ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே. அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான். சில்லாளும், தூபால்காயீன் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவன் வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் கருவிகளைச் செய்யும் தொழிலாளி ஆனான். தூபால்காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன். காயீனைக் கொல்பவனிடம் ஏழுமடங்கு பழிவாங்கப்படும் என்றால், லாமேக்கிற்காக எழுபத்தேழு மடங்கு பழிவாங்கப்படும்.” ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றாள், “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக இறைவன் வேறொரு பிள்ளையைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். சேத்தும் ஒரு மகனைப் பெற்றான்; அவன் தன் மகனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். அக்காலத்தில் மக்கள் யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை ஆராதிக்க ஆரம்பித்தார்கள்.
ஆதியாகமம் 4:15-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். அப்படியே காயீன் யெகோவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான். ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான். லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர். ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான். சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: “ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான். பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள். சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் யெகோவாவுடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.
ஆதியாகமம் 4:15-26 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார். காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான். ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள். லாமேக்கு தன் மனைவிகளிடம், “ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன். காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது. என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான். ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
ஆதியாகமம் 4:15-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான். பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.