பிறகு கர்த்தர் காயீனிடம், “அவ்வாறு நடக்குமாறு நான் விடமாட்டேன். எவராவது உன்னைக் கொன்றால் நான் அவர்களை மிகுதியாகத் தண்டிப்பேன்” என்றார். ஆகையால் கர்த்தர் காயீன்மீது ஒரு அடையாளம் இட்டார். அதனால் எவரும் அவனைக் கொல்லமாட்டார்கள் என்றார். காயீன் கர்த்தரைவிட்டு விலகிப்போய் ஏதேனின் கிழக்கிலிருந்த நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியுடன் பாலின உறவு கொண்டபோது அவள் ஏனோக் என்னும் பெயருள்ள குமாரனைப் பெற்றாள். காயீன் ஒரு நகரத்தை உருவாக்கி அதற்குத் தன் குமாரனின் பெயரை வைத்தான். ஏனோக்குக்கு ஈராத் என்னும் குமாரன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் என்ற குமாரன் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக் என்ற குமாரன் பிறந்தான். லாமேக் இரண்டு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதாள், இன்னொருத்தியின் பெயர் சில்லாள். ஆதாள் யாபாலைப் பெற்றாள். யாபால் கூடாரத்தில் வாழ்பவர்களுக்கும், மந்தையை மேய்க்கிறவர்களுக்கும் தந்தை ஆனான். ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு குமாரன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான். சில்லாள் தூபால்-காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் தந்தை ஆனான். தூபால் காயீனுக்கு, நாமாள் என்ற சகோதரி இருந்தாள். லாமேக்கு தன் மனைவிகளிடம், “ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன். காயீனின் கொலைக்காக கொடுக்கப்பட்ட தண்டனை மிகப்பெரியது. என்னைக் கொல்வதால் கிடைக்கும் தண்டனையும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றான். ஆதாம் ஏவாளோடு பாலின் உறவு கொண்டான். ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்குச் சேத் என்று பெயரிட்டனர். ஏவாள், “தேவன் எனக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்திருக்கிறார். காயீன் ஆபேலைக் கொன்றான். ஆனால் நான் சேத்தைப் பெற்றேன்” என்றாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தான். அப்பொழுது மனிதர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 4:15-26
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்