ஆதியாகமம் 4:1-12

ஆதியாகமம் 4:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் உறவுகொண்டான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று, “நான் யெகோவாவின் உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவள் காயீனின் சகோதரனான ஆபேலைப் பெற்றாள். ஆபேல் மந்தை மேய்த்தான், காயீன் விவசாயம் செய்தான். சிறிது காலத்தின்பின் காயீன் தன் நிலத்தின் விளைச்சலில் சிலவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் கொழுத்தத் தலையீற்றுகளில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். யெகோவா ஆபேலையும் அவன் காணிக்கையையும் தயவுடன் ஏற்றுக்கொண்டார், ஆனால் காயீனையும் அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் கடுங்கோபங்கொண்டான், கோபத்தால் அவன் முகம் சோர்ந்திருந்தது. அப்பொழுது யெகோவா காயீனிடம், “நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் ஏன் சோர்ந்திருக்கிறது? நீ சரியானதைச் செய்தால், நீ உயர்வு பெறுவாய் அல்லவா? நீ சரியானதைச் செய்யாவிட்டால், உன் கதவடியில் பதுங்கிக் கிடக்கும் பாவம் உன்னைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுமே; நீயோ அதை மேற்கொள்ளவேண்டும்” என்றார். அதன்பின்பு காயீன் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலில் இருக்கையில் காயீன் தன் சகோதரன் ஆபேலைத் தாக்கிக் கொன்றான். அப்பொழுது யெகோவா காயீனிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்குக் காயீன், “எனக்குத் தெரியாது; நான் என் சகோதரனுக்குக் காவல்காரனோ?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நீ என்ன செய்துவிட்டாய்? கேள், உன் சகோதரனின் இரத்தம் நிலத்தில் இருந்து என்னை நோக்கிக் கதறுகிறது! இப்பொழுது நீ சபிக்கப்பட்டிருக்கிறாய், உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்க தன் வாயைத் திறந்த, இந்த நிலத்திலிருந்து நீ துரத்தப்பட்டும் இருக்கிறாய். நீ நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும்போது அது உனக்கு விளைச்சலைத் தராது. நீ பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவனாய் இருப்பாய்” என்றார்.

ஆதியாகமம் 4:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான். அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.

ஆதியாகமம் 4:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆதாமும் அவன் மனைவியும் பாலின உறவு கொண்டனர். அவள் கர்ப்பமுற்று காயீன் என்ற ஒரு குமாரனைப் பெற்றெடுத்து, நான், “கர்த்தரின் உதவியால் ஒரு மனிதனைப் பெற்றுள்ளேன்” என்றாள். அதன் பிறகு ஏவாள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவன் காயீனின் சகோதரனான ஆபேல். ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும், காயீன் ஒரு விவசாயியாகவும் வளர்ந்தனர். அறுவடைக் காலத்தில் காயீன் தன் வயலில் விளைந்த தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு போனான். ஆனால் ஆபேல் தன் மந்தையிலிருந்து சில சிறந்த ஆடுகளைக் கொண்டு போனான். கர்த்தர் ஆபேலையும், அவன் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் கர்த்தர் காயீனையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காயீன் துக்கமும் கோபமும் கொண்டான். கர்த்தர் அவனிடம், “ஏன் நீ கோபமாயிருக்கிறாய்? ஏன் உன் முகத்தில் கவலை தெரிகிறது. நீ நன்மை செய்திருந்தால் எனக்கு விருப்பமானவனாக இருந்திருப்பாய். நானும் உன்னை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் நீ தீமை செய்தால் பிறகு அந்தப் பாவம் உன் வாழ்வில் இருக்கும். உனது பாவம் உன்னை அடக்கி ஆள விரும்பும். நீயோ உன் பாவத்தை அடக்கி ஆளவேண்டும்” என்றார். காயீன் தனது சகோதரன் ஆபேலிடம். “வயலுக்குப் போவோம்” என்றான். அவர்கள் வயலுக்குப் போனார்கள். அங்கே காயீன் தன் தம்பியைத் தாக்கிக் கொலை செய்துவிட்டான். பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான். அதற்குக் கர்த்தர், “நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது இரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. இப்பொழுது அவனது இரத்தத்தை உன் கைகளிலிருந்து வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த, இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். கடந்த காலத்தில் நீ பயிர் செய்தவை நன்றாக விளைந்தன. ஆனால் இனிமேல் நீ பயிரிடுபவை விளையாதவாறு இந்த பூமி தடை செய்யும். இந்தப் பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக அலைந்துகொண்டிருப்பாய்” என்றார்.

ஆதியாகமம் 4:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.