ஆதி 4:1-12

ஆதி 4:1-12 IRVTAM

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான். அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.