ஆதியாகமம் 38:1-10

ஆதியாகமம் 38:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் யூதா தன் சகோதரரை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச்சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்கும்படி போனான். அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் எனப் பெயரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள். யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான். ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார். அப்பொழுது யூதா ஓனானிடம், “உன் சகோதரனின் மனைவியுடன் கூடிவாழ்ந்து, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி, ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான். ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான். இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார்.

ஆதியாகமம் 38:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அக்காலத்திலே யூதா தன் சகோதரர்களை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய மகளைக் கண்டு, அவளைத் திருமணம்செய்து, அவளோடு உறவுகொண்டான். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; அவனுக்கு ஏர் என்று பெயரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனாக இருந்ததால், யெகோவா அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: “நீ உன் அண்ணன் மனைவியைச் சேர்ந்து, அவளுக்கு மைத்துனனுக்குரிய கடமையைச் செய்து, உன் அண்ணனுக்கு சந்ததியை உண்டாக்கு” என்றான். அந்த சந்ததி தன் சந்ததியாக இருக்காதென்று ஓனான் அறிந்ததால், அவன் தன் அண்ணனுடைய மனைவியைச் சேரும்போது, தன் அண்ணனுக்கு சந்ததி உண்டாகாதபடித் தன் விந்தைத் தரையிலே விழவிட்டான். அவன் செய்தது யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாததாக இருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

ஆதியாகமம் 38:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. அவளுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். அவள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். இன்னொரு குமாரன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர். யூதா தன் மூத்த குமாரனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான். இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார்.

ஆதியாகமம் 38:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்