ஆதியாகமம் 38:1-10

ஆதியாகமம் 38:1-10 TCV

அக்காலத்தில் யூதா தன் சகோதரரை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச்சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்கும்படி போனான். அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான். அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் எனப் பெயரிட்டாள். பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள். யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான். ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார். அப்பொழுது யூதா ஓனானிடம், “உன் சகோதரனின் மனைவியுடன் கூடிவாழ்ந்து, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி, ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான். ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான். இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார்.