ஆதியாகமம் 37:18-24

ஆதியாகமம் 37:18-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

ஆதியாகமம் 37:18-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் அவர்களோ, அவனைத் தூரத்திலேயே கண்டார்கள், அவன் அவர்கள் அருகே வருவதற்கு முன்பு அவர்கள் அவனைக் கொல்வதற்குச் சதித்திட்டம் போட்டார்கள். அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகிறான்!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள், “வாருங்கள், இப்பொழுது அவனைக் கொன்று, இங்குள்ள குழிகள் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன்பின் அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக் கேட்டபோது, அவனை அவர்களுடைய கைகளிலிருந்து தப்புவிக்க முயற்சித்தான். அவன், “நாம் அவனைக் கொல்லாமல் விடுவோம். நீங்கள் இரத்தத்தைச் சிந்தாமல் காடுகளிலுள்ள இந்தக் கிணற்றில் அவனைப் போட்டுவிடுவோம், அவன்மேல் கைவைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்புவித்துத் தன் தகப்பனிடத்திற்கு மறுபடியும் கூட்டிச்செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான். யோசேப்பு தன் சகோதரரிடம் வந்தவுடனே அவர்கள் அவன் அணிந்திருந்த, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்கியை உரிந்து போட்டார்கள். அவர்கள் அவனைத் தூக்கி, அங்கே இருந்த கிணற்றிலே போட்டார்கள். அப்பொழுது அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வெறுமையாயிருந்தது.

ஆதியாகமம் 37:18-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் தூரத்தில் வருவதை அவர்கள் கண்டு, அவன் தங்களுக்கு அருகில் வருவதற்குமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைசெய்து, ஒருவரை ஒருவர் நோக்கி: “இதோ, கனவுகாண்கிறவன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு கொடியமிருகம் அவனைக் கொன்றது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய கனவுகள் எப்படி நிறைவேறுமென்று பார்ப்போம்” என்றார்கள். ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்களுடைய கைக்குத் தப்புவித்து, அவனை அவனுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாகி, அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான். யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி, அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.

ஆதியாகமம் 37:18-24 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர். ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.