ஆதியாகமம் 37:18-24

ஆதியாகமம் 37:18-24 TAERV

யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர். ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.