ஆதியாகமம் 37:1-11
ஆதியாகமம் 37:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்ட போது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான். அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
ஆதியாகமம் 37:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் நாட்டிற்குத் திரும்பவும் வந்து அங்கே வாழ்ந்தான். யாக்கோபின் வம்சவரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தகப்பனின் மனைவிகளான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்களாகிய தனது சகோதரருடன் மந்தை மேய்ப்பது வழக்கம். அவர்களின் கெட்டசெயல்களைப் பற்றி யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்தான். இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருக்கையில் யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், அவனைத் தன் மற்ற மகன்களைவிட அதிகமாக நேசித்தான்; இதனால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலுடையை அவனுக்காக செய்வித்தான். தங்கள் தகப்பன் தங்களைப்பார்க்கிலும் யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவன் சகோதரர் கண்டார்கள்; அதனால் அவர்கள் அவனுடன் தயவாய்ப் பேசாமல் அவனை வெறுத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டான், அதை அவன் தன் சகோதரருக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். அவன் தன் சகோதரரிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக்கொண்டிருந்தோம், அப்பொழுது திடீரென எனது கதிர்க்கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க்கட்டுகள் என் கதிர்க்கட்டைச் சுற்றி நின்று குனிந்து வணங்கின” என்றான். அப்பொழுது அவன் சகோதரர் அவனிடம், “நீ எங்கள்மேல் ஆளுகைசெய்ய எண்ணம் கொண்டிருக்கிறாயோ? நீ உண்மையாகவே எங்களை ஆளப்போகிறாயோ?” என்று கேட்டார்கள். அவர்கள் அவனுடைய கனவின் நிமித்தமும், அவன் சொன்னவற்றின் நிமித்தமும் அவனை மேலும் வெறுத்தார்கள். யோசேப்பு இன்னுமொரு கனவு கண்டான், அதையும் அவன் தன் சகோதரரிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான். இதை அவன் தன் தகப்பனுக்கும், தனது சகோதரருக்கும் சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன், “நீ என்ன கனவு கண்டிருக்கிறாய்? உன் தாயும் நானும் உன் சகோதரரும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கிறாயா?” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவன் சகோதரர் அவன்மீது பொறாமை கொண்டார்கள், அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டான்.
ஆதியாகமம் 37:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது” என்றான். அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: “நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ”? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான். இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
ஆதியாகமம் 37:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். இது யாக்கோபின் குடும்ப வரலாறு: யோசேப்பு ஓர் 17 வயது இளைஞன். தன் சகோதரர்களோடு சேர்ந்து ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்வது அவனது வேலை. பில்காள், சில்பாள், ஆகியோரின் குமாரர்களும் அவனோடு இருந்தனர் (பில்காளும, சில்பாளும் அவனது தந்தையின் மனைவிகள்.) யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த கெட்ட செயல்களைத் தந்தையிடம் சொன்னான். யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற குமாரர்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை. ஒரு நாள் யோசேப்புக்கு விசேஷமான கனவு வந்தது. அவன் அதனைச் சகோதரர்களிடம் சொன்னான். அதனால் அவர்கள் அவனை மேலும் வெறுத்தனர். யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன். நாம் எல்லோரும் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். கோதுமை அரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது என்னுடைய கட்டு நிமிர்ந்திருந்தது. உங்கள் கட்டுகள் என் கட்டுகளைச் சுற்றி வந்து வணங்கின” என்றான். அவனுடைய சகோதரர்கள், “இதனால் நீ ராஜாவாகி எங்களையெல்லாம் ஆளலாம் என்று நினைக்கிறாயா?” எனக் கேட்டனர். அவன் சகோதரர்கள் இக்கனவைப்பற்றி அறிந்தபிறகு அதிகமாக அவனை வெறுத்தனர். பிறகு யோசேப்புக்கு இன்னொரு கனவு வந்தது. அதையும் அவன் அவர்களிடம் சொன்னான். “நான் இன்னொரு கனவு கண்டேன். அதில் சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கின” என்றான். அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, “என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?” என்று கேட்டான். யோசேப்பின் சகோதரர்கள் தொடர்ந்து அவன்மீது பொறாமைகொண்டிருந்தனர், அவன் தந்தையோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டு, அது என்னவாக இருக்கும் என்று யோசனை செய்தான்.