ஆதி 37:1-11

ஆதி 37:1-11 IRVTAM

யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் மகன்கள் எல்லோரையும்விட அவனை அதிகமாக நேசித்து, அவனுக்குப் பலவர்ண அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும்விட அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாக நேசிக்கிறதை அவனுடைய சகோதரர்கள் கண்டபோது, அவனோடு ஆதரவாகப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குத் தெரிவித்தான்; அதனால் அவனை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது” என்றான். அப்பொழுது அவனுடைய சகோதரர்கள் அவனைப் பார்த்து: “நீ எங்கள்மேல் ஆளுகை செய்வாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ”? என்று சொல்லி, அவனை அவனுடைய கனவுகளினாலும், அவனுடைய வார்த்தைகளினாலும் இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவன் வேறொரு கனவு கண்டு, தன் சகோதரர்களை நோக்கி: “நான் இன்னும் ஒரு கனவைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது” என்றான். இதை அவன் தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் சொன்னபோது, அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து: “நீ கண்ட இந்தக் கனவு என்ன? நானும் உன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தரைவரைக்கும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ” என்று அவனைக் கடிந்துகொண்டான். அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவனுடைய தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.