ஆதியாகமம் 33:4-11

ஆதியாகமம் 33:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் ஏசாவோ, யாக்கோபைக் கண்டதும் ஓடிப்போய், அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இருவருமே அழுதார்கள். பின்பு ஏசா நிமிர்ந்து பார்த்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டபோது, “உன்னோடிருக்கும் இவர்கள் யார்?” என்று யாக்கோபிடம் கேட்டான். அதற்கு அவன், “இவர்கள் உமது அடியவனாகிய எனக்கு இறைவன் கிருபையாய்த் தந்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்து குனிந்து வணங்கினார்கள். அடுத்ததாக லேயாளும் தன் பிள்ளைகளுடன் வந்து வணங்கினாள். கடைசியாக ராகேலும் யோசேப்பும் வந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா, “நான் வழியிலே சந்தித்த மிருகக் கூட்டங்களை நீ அனுப்பியதன் காரணம் என்ன?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “ஆண்டவனே! அது உம்முடைய கண்களில் தயவு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே” என்றான். அதற்கு ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் ஏராளம் இருக்கின்றன. உன்னிடம் உள்ளவற்றை நீயே வைத்துக்கொள்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படியல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடமிருந்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும். இப்பொழுது என்னை நீர் தயவாய் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், நான் உமது முகத்தைப் பார்ப்பது இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. இறைவன் என்மேல் இரக்கமுடையவராயிருக்கிறார், எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் இருக்கின்றன. எனவே உமக்குக் கொண்டுவரப்பட்ட அன்பளிப்புகளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறு அவன் வற்புறுத்தியபடியால் ஏசா அவற்றை ஏற்றுக்கொண்டான்.

ஆதியாகமம் 33:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான். அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான். அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான். அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

ஆதியாகமம் 33:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான். யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான். பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள். ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான். யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான். ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான். அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான்.

ஆதியாகமம் 33:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான். அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்