ஆதியாகமம் 33:4-11

ஆதியாகமம் 33:4-11 TAERV

அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான். யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான். பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள். ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான். யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான். ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான். அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான்.