ஆதியாகமம் 32:13-21

ஆதியாகமம் 32:13-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்று இராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும் இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி, முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான். இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி, இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான். அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று இராத்திரி பாளயத்திலே தங்கி

ஆதியாகமம் 32:13-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்றிரவு அவன் அங்கேயே தங்கினான்; பின் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்பளிப்பாக, இருநூறு வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக் கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக் கடாக்கள், முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்தான். அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் வேலைக்காரரிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சிறிது இடம்விட்டு, எனக்கு முன்னே போங்கள்” என்றான். அவன் முன்னே செல்பவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகிறாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்குச் சொந்தக்காரன் யார்?’ என்று கேட்டால், ‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; இவற்றைத் தன் ஆண்டவன் ஏசாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார், அவரும் எங்கள் பின்னே வருகிறார்’ என்று சொல்” என்றான். “ஏசாவைச் சந்திக்கும்போது இதேவிதமாகவே சொல்லவேண்டும்” என்று இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் மந்தைகளைப் பின்தொடர்ந்து சென்ற மற்றவர்களுக்கும் அவன் அறிவுறுத்தினான். “ ‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எங்கள் பின்னால் வருகிறான்’ என்பதைத் தவறாமல் சொல்லுங்கள்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்பளிப்புகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என நினைத்தான். அப்படியே யாக்கோபின் அன்பளிப்புகள் அவனுக்கு முன்னே கொண்டுபோகப்பட்டன; அவனோ அன்றிரவு கூடாரத்திலேயே தங்கினான்.

ஆதியாகமம் 32:13-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்று இரவு அவன் அங்கே தங்கி, தன்னிடம் உள்ளவைகளில் தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமதியாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்படைத்து, நீங்கள் ஒவ்வொரு மந்தைக்கும் முன்னும் பின்னுமாக இடம்விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுசெல்லுங்கள்” என்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்லி, முதலில் போகிறவனை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்களுக்குப் பின்னே வருகிறான் என்று சொல்” என்றான். இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தவிதமாகவே அவனிடம் சொல்லி, “இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்களுக்குப் பின்னே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திவிட்டு, பின்பு அவனுடைய முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்மீது தயவாயிருப்பான்” என்றான். அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி

ஆதியாகமம் 32:13-21 பரிசுத்த பைபிள் (TAERV)

யாக்கோபு இரவு முழுவதும் அங்கே தங்கி இருந்தான். ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில பொருட்களைத் தயார் செய்து வைத்தான். 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், பால் கொடுக்கும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான். யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள், ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான். யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது. இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான். யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான். எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.