ஆதியாகமம் 32:13-21

ஆதியாகமம் 32:13-21 TAERV

யாக்கோபு இரவு முழுவதும் அங்கே தங்கி இருந்தான். ஏசாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க சில பொருட்களைத் தயார் செய்து வைத்தான். 200 வெள்ளாடுகளையும், 20 கடாக்களையும் 200 செம்மறி ஆடுகளையும், பால் கொடுக்கும் 30 ஒட்டகங்களையும் அதன் குட்டிகளையும், 40 கடாரிகளையும், 10 காளைகளையும் 20 பெண் கழுதைகளையும், 10 ஆண் கழுதைகளையும் பிரித்தெடுத்தான். வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான். யாக்கோபு அவர்களுக்குச் சில ஆணைகளையும் இட்டான். முதல் குழுவிடம், “என் சகோதரன் வந்து, ‘யாருடைய மிருகங்கள் இவை? எங்கே போகின்றன? யாருடைய வேலைக்காரர்கள் நீங்கள்’ என்று கேட்டால் நீங்கள், ‘இவை உங்கள் அடிமையான யாக்கோபின் மிருகங்கள். எஜமானே இவை உங்களுக்கான பரிசுகள், யாக்கோபும் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றான். யாக்கோபு இரண்டாம் வேலைக்காரனுக்கும், மூன்றாம் வேலைக்காரனுக்கும், மற்ற வேலைக்காரர்களுக்கும் இவ்வாறே கட்டளையிட்டான். “நீங்கள் ஏசாவைச் சந்திக்கும்போது. இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான். யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான். எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.