ஆதியாகமம் 31:25-55

ஆதியாகமம் 31:25-55 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே! எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே. என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய். உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார். நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன். ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான். அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான். அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன? இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும். “நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை. காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர். பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது. இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர். என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான். அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்? இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான். எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான். அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அப்படியே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள். அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா என்றும், யாக்கோபு, கலயெத் என்றும் பெயரிட்டார்கள். அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது. அது மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, யெகோவா எனக்கும் உனக்கும் இடையே கண்காணிப்பாராக. நீ என் மகள்களைத் துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் சாட்சியாயிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்” என்றான். மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன. நான் இக்குவியலைக் கடந்து உனக்குத் தீங்குசெய்ய உன் பக்கம் வரமாட்டேன் என்பதற்கும், நீயும் இக்குவியலையும், தூணையும் கடந்து என் பக்கமாய் எனக்குத் தீங்குசெய்ய வரமாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி. ஆபிரகாமின் இறைவனும், நாகோரின் இறைவனும், அவர்கள் தகப்பனின் இறைவனுமாய் இருக்கிறவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான். அப்படியே யாக்கோபும் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின் பெயரால் ஆணையிட்டான். பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலிசெலுத்தி, தன் உறவினர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தான். அவர்கள் சாப்பிட்டபின் அன்றிரவு அவ்விடத்தில் தங்கினார்கள். லாபான் மறுநாள் காலையில் தன் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

ஆதியாகமம் 31:25-55 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு தன் கூடாரத்தை மலையிலே போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரர்களோடுகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: “நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்? நீ ஓடிப்போவதை எனக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாக என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னை சந்தோஷமாக சங்கீதம், மேளதாளம், கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. என் பிள்ளைகளையும் என் மகள்களையும் நான் முத்தம் செய்யவிடாமல் போனதென்ன? இந்தச் செயலை நீ அறிவில்லாமல் செய்தாய். உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்று நேற்று இரவில் என்னோடு சொன்னார். இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள ஏக்கத்தால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய்” என்று கேட்டான். யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: “உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன். ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடு விடவேண்டாம்; உம்முடைய பொருட்கள் ஏதாவது என்னிடத்தில் இருக்குமானால் நீர் அதை நம்முடைய சகோதரர்களுக்கு முன்பாகத் தேடிப்பார்த்து, அதை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது. அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் தேடிப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்திற்குப் போனான். ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவள் தன் தகப்பனை நோக்கி: “என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திருக்காததைக்குறித்துக் கோபப்பட வேண்டாம்; பெண்களுக்குரிய வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள்; அப்படியே அவன் அந்தச் சிலைகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன? என் தட்டுமுட்டுகளையெல்லாம் தேடிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரர்களுக்கும் உம்முடைய சகோதரர்களுக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நியாயம் தீர்க்கட்டும். இந்த இருபது வருடகாலமாக நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினை அழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் சாப்பிடவில்லை. காயப்பட்டதை நான் உம்மிடம் கொண்டுவராமல், அதற்காக நான் உத்திரவாதம்செய்தேன்; பகலில் திருடப்பட்டதையும், இரவில் திருடப்பட்டதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன். இந்த இருபது வருடகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினான்கு வருடங்கள் உம்முடைய இரண்டு மகள்களுக்காகவும், ஆறு வருடங்கள் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடு இல்லாவிட்டால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கடின உழைப்பையும் பார்த்து, நேற்று இரவு உம்மைக் கடிந்துகொண்டார்” என்று சொன்னான். அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: “இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்? இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருப்பதற்காக, நீயும் நானும் உடன்படிக்கை செய்துகொள்ளலாம்” என்றான். அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். பின்னும் யாக்கோபு தன் சகோதரர்களைப் பார்த்து, “கற்களைக் குவியலாகச் சேருங்கள்” என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் உணவருந்தினார்கள். லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான். “இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது. அல்லாமலும் அவன்: “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், யெகோவா எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக; நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி” என்று சொன்னதால், அது மிஸ்பா என்னும் பெயர்பெற்றது. மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: “இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார். தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக” என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள். லாபான் அதிகாலையில் எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.

ஆதியாகமம் 31:25-55 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர். லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் குமாரத்திகளைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். நான் என் குமாரத்திகளையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.) எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை. ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது குமாரத்திகளை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான். லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் குமாரத்திகள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது குமாரத்திகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான். அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர். லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான். பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது. மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான். யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் குமாரத்திகளையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.

ஆதியாகமம் 31:25-55 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார். இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான். யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான். அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான். ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன? என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும். இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பி விட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள். லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான். இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது. அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணி னாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது. பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள். லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.