மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர். லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் குமாரத்திகளைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். நான் என் குமாரத்திகளையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.) எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை. ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை. யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது குமாரத்திகளை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான். லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் குமாரத்திகள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது குமாரத்திகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான். அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர். லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான். பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது. மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான். யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் குமாரத்திகளையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.
வாசிக்கவும் ஆதியாகமம் 31
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: ஆதியாகமம் 31:25-55
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்