ஆதியாகமம் 26:23-35

ஆதியாகமம் 26:23-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவன் அங்கிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். அன்று இரவு யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, “நான் உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவன்; நீ பயப்படாதே, நான் உன்னுடனேகூட இருக்கிறேன். நான் என் பணியாளன் ஆபிரகாமின் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்” என்றார். அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு அவரை வழிபட்டான். அங்கே தனக்கு ஒரு கூடாரத்தையும் அமைத்தான், அவனுடைய வேலைக்காரர் அவ்விடத்தில் ஒரு கிணற்றையும் தோண்டினார்கள். அக்காலத்தில் அபிமெலேக்கு தன் ஆலோசகன் அகுசாத்துடனும், தன் படைத்தளபதி பிகோலுடனும் கேராரிலிருந்து ஈசாக்கிடம் வந்தான். ஈசாக்கு அவர்களிடம், “என்னுடன் பகைமை பாராட்டி, என்னை வெளியே துரத்தி விட்டீர்களே, இப்பொழுது ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யெகோவா உம்மோடு இருக்கிறார் என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்; ‘எனவே, நமக்கிடையில் சத்தியம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும்.’ நாங்கள் உம்முடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அதாவது, நாங்கள் உம்மைத் தொந்தரவு செய்யாமல், எப்பொழுதும் உம்மை நன்றாக நடத்தி, சமாதானத்தோடே அனுப்பியதுபோல், நீரும் எங்களுக்கு ஒரு தீமையும் செய்யாது இருப்பீர் என்று ஆணையிட்டுக் கொள்வோம். நீர் இப்பொழுது யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்” என்றார்கள். பின்பு ஈசாக்கு அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தான். அவ்விருந்தில் அவர்களெல்லாரும் சாப்பிட்டு, குடித்தார்கள். மறுநாள் அதிகாலை எழுந்து, ஒருவரோடொருவர் ஆணையிட்டு சபதம் செய்துகொண்டார்கள். ஈசாக்கு அவர்களை வழியனுப்பினான், அவர்கள் சமாதானத்துடன் அவனைவிட்டுப் புறப்பட்டார்கள். அந்த நாளில், ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றி அவனிடம் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “நாங்கள் தண்ணீரைக் கண்டோம்!” என்றார்கள். அவன் அக்கிணற்றிற்கு சிபா என்று பெயரிட்டான். இன்றுவரை அப்பட்டணம் பெயெர்செபா என்றே அழைக்கப்படுகிறது. ஏசாவுக்கு நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும் திருமணம் செய்துகொண்டான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனவேதனையை உண்டாக்குகிறவர்களாய் இருந்தார்கள்.

ஆதியாகமம் 26:23-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். அன்று இரவிலே யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார். அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள். அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: “ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே” என்றான். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம். நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள். அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள். அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள். அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள். அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது. ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.

ஆதியாகமம் 26:23-35 பரிசுத்த பைபிள் (TAERV)

அங்கிருந்து ஈசாக்கு பெயர்செபாவுக்குப் போனான். அன்று இரவு கர்த்தர் அவனோடு பேசி, “நானே உனது தந்தை ஆபிரகாமின் தேவன், அஞ்சவேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன் குடும்பத்தை பெரிதாக்குவேன். எனது ஊழியனான ஆபிரகாமுக்காக இதனைச் செய்வேன்” என்று சொன்னார். எனவே, ஈசாக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி கர்த்தரை தொழுதுக்கொண்டு அங்கேயே குடியேறினான். அவனது வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினர். அபிமெலேக்கு கேராரிலிருந்து ஈசாக்கைப் பார்க்க வந்தான். அவன் தன்னோடு தன் அமைச்சரான அகுசாத்தையும் அழைத்துவந்தான். மீகோல் எனும் படைத் தளபதியும் கூட வந்தான். “என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்? இதற்கு முன் என்னை நீங்கள் வெறுத்தீர்கள். உங்கள் நாட்டை விட்டு துரத்தினீர்களே” என்று ஈசாக்கு கேட்டான். “கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம். நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். நாங்கள் உன்னைத் துன்புறுத்தவில்லை. நீயும் எங்களைத் துன்புறுத்தமாட்டாய் என்று வாக்குறுதி செய். நாங்கள் உன்னைச் சமாதானத்தோடுதான் வெளியே அனுப்பினோம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது” என்றனர். அதனால் ஈசாக்கு அவர்களுக்கு விருந்து கொடுத்தான். அவர்கள் நன்றாக உண்டு, குடித்தனர். மறுநாள் அதிகாலையில் ஒருவரோடொருவர் வாக்குறுதி செய்துகொண்டபின், அவர்கள் சமாதானத்தோடு பிரிந்து போனார்கள். அன்று, ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து தாங்கள் தோண்டிய கிணற்றைப்பற்றிக் கூறினர். “அதில் தண்ணீரைக் கண்டோம்” என்றனர். அதனால் ஈசாக்கு அதற்கு சேபா என்று பெயரிட்டான். அந்த நகரமே பெயெர்செபா என்று இன்றும் அழைக்கப்படுகிறது. ஏசாவுக்கு 40 வயது ஆனபோது, அவன் ஏத்தியரான இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தி பெயேரியின் குமாரத்தியான யூதித், இன்னொருத்தி ஏலோனுடைய குமாரத்தியான பஸ்மாத். இவர்களால் ஈசாக்கும் ரெபெக்காளும் பாதிக்கப்பட்டனர்.

ஆதியாகமம் 26:23-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது. ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.