அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். அன்று இரவிலே யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார். அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள். அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: “ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே” என்றான். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம். நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள். அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள். அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள். அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள். அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது. ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.
வாசிக்கவும் ஆதி 26
கேளுங்கள் ஆதி 26
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதி 26:23-35
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்