ஆதியாகமம் 24:12-20
ஆதியாகமம் 24:12-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும். இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள். நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான். அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள். அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள். வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான். உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள். அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள்.
ஆதியாகமம் 24:12-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற யெகோவாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். இதோ, நான் இந்தக் கிணற்றினருகில் நிற்கிறேன், இந்த ஊர்ப் பெண்கள் தண்ணீர் இறைக்க வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கக் கொடுப்பேன் என்றும் சொல்லும் பெண்ணானவளே, நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாக இருக்கவும், என் எஜமானுக்கு தயவுசெய்தீர் என்று நான் அதன்மூலம் தெரிந்துகொள்ளவும் உதவிசெய்யும்” என்றான். அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள். அந்தப் பெண் மிகுந்த அழகுள்ளவளும், கன்னிகையுமாக இருந்தாள்; அவள் கிணற்றில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். அப்பொழுது அந்த வேலைக்காரன், அவளுக்கு நேராக ஓடி: “உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும்” என்றான். அதற்கு அவள்: “குடியும் என் ஆண்டவனே” என்று சீக்கிரமாகக் குடத்தைத் தன் கையிலிருந்து இறக்கி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், “உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றுசொல்லி; சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
ஆதியாகமம் 24:12-20 பரிசுத்த பைபிள் (TAERV)
அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது குமாரனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும். நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர். ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான். அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் குமாரத்தியாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த குமாரன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள். அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள். வேலைக்காரன் அவளிடம் போய், “நான் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரை உன் குடத்திலிருந்து தா” என்று கேட்டான். உடனே ரெபெக்காள் தோளிலிருந்து குடத்தை இறக்கி, “இதைக் குடியுங்கள் ஐயா” என்றாள். அவன் குடித்து முடித்ததும் அவள், “உங்கள் ஒட்டகங்கள் குடிக்கவும் நான் தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொல்லி, குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.
ஆதியாகமம் 24:12-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப்புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளா யிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள். அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றுசொல்லி; சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.